Heavy Rush 
செய்திகள்

தீபாவளி பயணம்; அலைமோதும் கூட்டம்; சொந்த ஊர் செல்ல சிரமம்; அதிகரித்த டிக்கெட் விலை!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டம், எங்கு பார்த்தாலும் அலைமோதுகிறது. தீபாவளி திருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசின் சார்பில் அதிகப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பேருந்துகள் கிடைக்க சிரமமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதிலும் பண்டிகை நாள் என்பதால் பேருந்துகளில் டிக்கெட் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் கூட்டம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என எங்கு பார்த்தாலும் அலை மோதுகிறது. தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தொடக்கி விட்டனர். அதனால் கடந்த இரண்டு நாட்களில் இருந்து எல்லா இடங்களிலும் டிராபிக் மற்றும் கூட்ட நெரிசலாகக் காணப்படுகிறது.

அந்த வகையில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளோடு, 2,125 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இது தவிர, பிற முக்கிய நகரங்களுக்கு இடையே, 1,130 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டும், மக்கள் கூட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

அதேபோல், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்புக் கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. சிலர் ரயில்களின் படிகளில் அமர்த்தபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

இதில் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத பலர், விமானங்களில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால் விமானத்தின் டிக்கெட் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, சென்னை - தூத்துக்குடி சாதாரண நாட்கள் கட்டணம் 4,109 ரூபாய். இது நேற்று 8,976 ரூபாய் முதல் 13,317 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது. சென்னை - மதுரை இடையே சாதாரண நாட்களில் விமானக் கட்டணம் 4,300 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம் நேற்று 11,749 ரூபாய் முதல் 17,745 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு இடங்களுக்கும் டிக்கெட் விலை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

உறவுகளை வளர்ப்போம்; மகிழ்ச்சியாய் வாழ்வோம்!

வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்!

கேப்டன் அமெரிக்கா கூறிய 10 ஊக்கமூட்டும் வரிகள்!

தீபாவளி திருநாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி அருளைப் பெற்றுத் தரும் சில பரிகாரங்கள்!

அதிகப்படியான இஞ்சி உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!

SCROLL FOR NEXT