தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதியோர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோர் 5,76,725 பேர் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் லட்சக்கணக்கானோர் பயன் பெற்று வருகிறார்கள். மேலும், இதுபோன்ற பல்வேறு ஓய்வூதிய உதவிகள் கேட்டு லட்சக்கணக்கானோர் தமிழக அரசின் வருவாய் துறையிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இந்த விண்ணப்பங்களில் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும் நிலை உள்ளது. இந்த சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சம் பயனாளிகள் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கிறார். மேலும், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் பயனடைவோர்களுக்கான ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.