செய்திகள்

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கே திறப்பது சரியல்ல - ஓ.பி.எஸ் ஆதங்கம்

ஜெ. ராம்கி

மதுக்கடைகளின் எண்ணிக்கை, செயல்படும் நேரத்த்தை குறைப்பதாக வாக்களித்த தி.மு.க அரசு, தற்போது காலை 7 மணிக்கே திறப்பதற்கு தயாராவது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க அதிருப்தி குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருப்பதாகவும் அது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். டாஸ்மாக் கடைகளை 7 மணிக்கு திறப்பதன் மூலமாக கிடைக்கும் சாதக, பாதகங்களை அரசியல் பார்வையாளர்கள் அலசி வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., மதுக்கடைகளை காலை 7 மணிக்கே திறப்பதற்கு யோசித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறியிருப்பது தி.மு.க.வின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சட்டம்-ஒழுங்கு சீரழிவினால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதைப் பற்றி கவலைப்படாத தி.மு.க., மது அருந்துபவர்களின் நலனைப் பற்றி கவலைப்படுவது மது அருந்துபவர்களை ஊக்குவிக்கும் செயலாகும். மதுவை ஒழிப்பதற்கு பதிலாக தி.மு.க. அரசு, மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

மக்கள் மது குடிப்பதை நிறுத்துவதன்மூலம் டாஸ்மாக் வருமானம் குறைந்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும் அமைச்சர், ஏன் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி யோசித்து வருகிறார்? மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் தினமும் 150 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுக் கொண்டிருந்த விற்பனை தற்போது 110 முதல் 120 கோடி வரை மட்டுமே நடைபெறுவதாக ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானம் குறைந்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும் அமைச்சர், ஏன் தினசரி 40 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் குறைந்துவிட்டது என்று புலம்புகிறார். தி.மு.க. அரசினுடைய எண்ணமெல்லாம், மக்கள் மதுவைக் குடித்து அழிந்தாலும் பரவாயில்லை, அரசிற்கு வர வேண்டிய வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளை அதிகாலையிலேயே திறக்கும் முடிவு, தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் செயல். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு என்றெல்லாம் நியாயப்படுத்தாமல்  டாஸ்மாக் கடைகளை அதிகாலையில் திறப்பது என்கிற யோசனையை கைவிடவேண்டும் என்றும் ஓ. பி.எஸ் தன்னுடைய அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஓ.பி.ஸ் அறிக்கையைப் பார்த்தால் டாஸ்மாக் கடைகளை அதிகாலையில் திறப்பது குறித்து தி.மு.க அரசு பரிசிலீனை செய்து வருவது போல் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்தாலும், சமூகப் பிரச்னைகள் அதிகமாகிவிட வாய்ப்பிருப்பது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT