செய்திகள்

8,700 விமானங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன

கல்கி டெஸ்க்

2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை எல்லாம் நாம் அறிவோம்.

 அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர் சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு இந்தியா, ரஷ்யா,  அமெரிக்கா ஆகிய உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் படிப்படியாக இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.

 இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தலைதூக்கி உள்ளது. தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய BF.7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.   தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் அத்தியாவசிய மருந்துகளின் தேவையும் அதிகரித்து வருவதால், அங்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உருமாறிய BF.7வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மொத்த மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 இச்சூழலில், இந்தியாவிலும்  உருமாறிய BF.7 வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சம் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு, மாநில அரசுகளை மத்திய சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளதால் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,

 ‘‘உலகில் கொரோனா நான்காவது அலை பரவுவதை மத்திய சுகாதாரத் துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.  அதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் நாங்கள் சோதனை செய்து வருகிறோம்.

இதுவரை 8,700 விமானங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 15 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு வைரஸ் தொற்று குறித்த சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகவும், தனிமைப்படுத்தலுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரபணு வரிசைமுறை மூலம், சில பயணிகளிடம் கொரோனா BF.7 மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளோம்.

எது எப்படியிருந்தாலும் BF.7 மாறுபாடு வைரஸை எதிர்த்துப் போராடும் அளவுக்கு நமது தடுப்பூசிகள் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருகிறது’’ என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT