நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகையும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது இவரோடு சேர்ந்து நடிகர் சரத்குமாரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, அவர்கள் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகே தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். அது மட்டுமின்றி, இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நிலையில், நேற்று விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் தனது மனைவி இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடைபெற்று முடிந்த மக்களைவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே ராதிகா சரத்குமார் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்தார். ஏறக்குறைய பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ராதிகா சரத்குமாரின் தோல்வி உறுதி என்றே கூறப்படுகிறது.
அதேபோல், அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து தேமுதிக சார்பில் அந்தக் கட்சியைச் சேர்ந்த விஜய பிரபாகரன் இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்து ஏறக்குறைய ஒன்பது சுற்றுகள் வரை இவர் முன்னிலையே வகித்து வந்தார். ஆனாலும், அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இவர் பின்னடைவையே சந்தித்தார்.
தனது மகன் விஜய பிரபாகரன் பின்னடைவை கேள்விப்பட்டதும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்று, தனது மகன் வெற்றி பெற வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளிலும் விஜய பிரபாகரன் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்தார். இதற்கிடையில் திமுக சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாக்கூர் இந்தத் தொகுதியில் வெற்றியை பெற்று இருக்கிறார்.
முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமாரின் வெற்றிக்காக சரத்குமார் செய்த அங்கப்பிரதட்சிணமும், மகன் விஜய பிரபாகரன் வெற்றிக்காக அவரது தாயார் பிரேமலதா விஜயகாந்த் செய்த தியானமும் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.