தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், தன்னை கொலை செய்ய சிலர் முயற்சி செய்வதாகக் கூறியது பகீர் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆந்திரா, அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் என இரண்டுமே நடைபெறவுள்ளன. இந்த இரண்டு தேர்தலுக்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் பிரச்சார வேலைகளும் அனல் பறக்கின்றன.
ஆந்திராவில் இந்த இரண்டு தேர்தலும் ஒரே கட்டமாக மே 13ம் தேதி நடைபெறவுள்ளது. ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளும் 25 லோக்சபா தொகுதிகளும் உள்ளன.
இதற்கிடையே தான் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் சிலர் தன்னை கொலை செய்ய முயற்சித்து வருகின்றனர் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது அந்தக் கூட்டத்தில் சிலர் மெல்லிய கத்திகளைப் பயன்படுத்தித் தன்னைத் தாக்க முயற்சித்ததாகவும் கூறினார்.
கட்சித் தொண்டர்கள் உடனான கூட்டத்தில் பேசிய அவர், “ என்னை சந்திக்க மக்கள் அதிகப்பேர் வரும்போதெல்லாம் அதில் சிலர் கையில் ப்ளேடுடன் ஊடுருவிகின்றனர். என்னை எப்படியாவது தாக்க வேண்டுமென்பதே அவர்களின் இலக்கு. ஒவ்வொரு நாளும் குறைந்தப்பட்சம் 200 பேருடன் போட்டோ எடுத்துக்கொள்கிறேன். அப்போது அதற்கானப் பாதுகாப்புகளும் இருக்கும்.
பெரிய கூட்டங்களில் போது என்னை தாக்க வேண்டுமென்பதற்காக அடியாட்களை அனுப்பிவைக்கிறார்கள். அவர்களைப் பிடிப்பதே எனது பாதுகாப்பு டீமிற்கு பெரும் வேலையாக உள்ளது. என்னை காலி செய்ய வேண்டுமென்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள். சமீபத்தில் கூட இப்படி ஒரு சதி நடந்தது. எதிர்த் தரப்பில் உள்ளவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்று நான் சந்தேகிக்கின்றேன்.” என்று பேசினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் 17 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் ஜன சேனா கட்சி 2 இடங்களிலும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.