பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். நகைக் கடையின் ஷட்டரை வெல்டிங் மூலமாக உடைத்து 9 கிலோ தங்கம், 70 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை கொள்ளையடித்தவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பல நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பெங்களூருவில் இரண்டு பேரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.
இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் குற்றாவளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வரும் ஸ்ரீதர் என்பவருக்கு 2 மாடிகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதில் 2வது தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் முதல் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 9ஆம் தேதி இரவு வியாபாரம் முடிந்த பிறகு ஸ்ரீதர் தனது நகைக்கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். 10ஆம் காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது
நகைக்கடையின் முன்பக்க ஷட்டரில் ஒரு ஆள் உள்ளே சென்று வருவதற்கு வசதியாக பெரிய ஓட்டை போடப்பட்டு இருந்தது. வெல்டிங் மெஷின் அல்லது கியாஸ் கட்டர் கொண்டு மர்மகும்பல் கொள்ளையடிப்பதற்காக ஷட்டரில் ஓட்டை போட்டது தெரியவந்தது. இதனால் பதற்றமடைந்த ஸ்ரீதர் கடைக்குள் சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து தங்கம், வைர நகைகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது. கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் தூக்கி சென்று விட்டனர். 9 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.