தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு முதல் வைக்கம் வரை வாகன நினைவு யாத்திரை இன்று தொடங்கியது.
தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிராக போராடிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு வரலாற்று விழாவினை முன்னிட்டு வாகன யாத்திரை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி ,தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் வாகன ரத யாத்திரையை துவக்கி வைத்தனர்.
சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் . இங்குள்ள பிரசித்திப்பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி அன்று வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மகாத்மா காந்தி நேரடியாக வந்து கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், தந்தைப் பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியும் கொடுத்தார். இதன்காரணமாக, தந்தைப் பெரியார், வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டதுடன், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, இந்தியாவில் ஏற்பட்ட சமூக புரட்சிகளில் வைக்கம் புரட்சியும் ஒன்றாகும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு ஈரோட்டில் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி வைக்கம் நிகழ்வுகளை நடத்த முடிவு செய்துள்ளது.அதன் விளைவாக கேரளா காங்கிரஸில் இருந்து குழுவினர் வந்துள்ளனர்.
கேரள காங்கிரஸ் ஆரம்பித்த வைக்கம், சிறு இயக்கமாக இருந்தது. பின்னர் பெரியார் கலந்து கொண்ட பிறகுதான் பெரிய மக்கள் இயக்கமாக மாறியது. இன்றைக்கும் தந்தை பெரியார் என்றால் வைக்கம் என்ற வார்த்தை நினைவிற்கு வரும். இதனை சமூக பிரச்சினையாக்கி அதன் தாக்கத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றார். வைக்கத்தின் நினைவுகளை மீண்டும் கேரளா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என கேரளா காங்கிரஸை கேட்டுக்கொண்டார்.