ஐதராபாத்தில் போலீஸ் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவதையடுத்து, ஐதராபாத் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் போலீஸ் துறையினர் ஒரே மாநிலம் ஒரே காவல்துறை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் முதலில் 15 நாட்கள் தொடர் பணி 4 நாட்கள் விடுமுறை என்ற அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சி வந்தப்பின் 26 நாட்கள் தொடர்பணி 4 நாட்கள் விடுமுறை என்று மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறப்பு போலீஸ் பிரிவினர் எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை தூண்டிவிட்டதாக கூறி 10 காவல் துறையினரை பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் தெலங்கானா மாநில காவல்துறையை சேர்ந்த போலீஸார் 30 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போதிலும் போராட்டங்கள் தொடர்ந்துதான் வருகின்றன. இந்தப் போராட்டம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாரங்கல் மற்றும் கொத்தக்குடம் ஆகிய பகுதிகளில் போலீஸாருடன் சேர்ந்து அவர்கள் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை ஐதராபாத் சிட்டி போலீஸ் கமிஷனர் சிவி ஆனந்த் பிறப்பித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “சிறப்பு படை போலீசார் சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றனா். தெலங்கானாவில் பெரிய அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே முன்னெச்சரிக்கையாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஐதராபாத் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு ஐதராபாத்தில் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
அந்தவகையில் நவம்பர் 27ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை நிறுத்த வேண்டும். போராட்டம் கூட்டம் ஆகியவை இருக்கக்கூடாது. அப்படி அத்தியாவசியம் என்றால் அனுமதி வாங்கித்தான் கூட்டம் கூட வேண்டும். இல்லையென்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.” என்று எச்சரித்திருக்கிறார்.