ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டெல்லி செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் , “இந்தியாவில் வரும் ஆண்டு ஜி-20 மாநாடு நடக்க இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் அடிப்படையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நானும் கூட்டத்தில் பங்கேற்க செல்கின்றேன்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் “தமிழ்நாட்டில் பாஜகவினர் தற்போது காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களே நகைச்சுவை செய்துவிட்டு அவர்களை அதற்காக சிரித்துக் கொள்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவை கண்டு யாருமே அச்சப்படுவதற்கு எதுவும் கிடையாது.
தற்போது தமிழ்நாட்டை குறி வைத்துள்ள பாஜக, இங்கு இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒருமிக பெரிய நாடகம் நடத்தி உள்ளனர். ஆனால் தமிழக மக்கள் அதனை சற்றுமே பொருட்படுத்தவில்லை” என கூறினார்
ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது 4 குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம். அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும் இதை பாஜக நன்கு பயன்படுத்திக் கொள்ளும் என்பதை அதிமுக தலைவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்” என எச்சரித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.