சீனாவில் சில மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 230க்கும் அதிகமானோர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கன்சு மாகாணத்தில் உள்ள ஜிஷிஷான் பகுதியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சீன ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் அனைத்தும் நொறுங்கி தரைமட்டமானது. இதுவரை கட்டட இடுப்பாடுகளில் சிக்கி 111 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 230க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்க புவியியல் அமைப்பு இந்த நிலநடுக்கம் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது எனவும், அவர்களின் ரிக்ட்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கான்சு மற்றும் காங்காய் மாகாணங்களில் தகவல் தொடர்பு, மின்சாரம், போக்குவரத்து என எல்லா விஷயங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.