மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வருகை பதிவேட்டில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ‘பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளேன். கோவிலின் பிரம்மாண்ட கோபுரங்கள், எழுச்சியூட்டும் சிற்பக்கலை, கட்டுமான அமைப்பு ஆகியவை தெய்வீக அனுபவத்தை அளித்தன. மக்கள் நலனுக்கும், தேசத்தின் செழிப்புக்கும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் வருடம் தோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழா பிரசித்திப் பெற்றது . அவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவே இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.குடியரசு தலைவர் ஆனபிறகு அவர் தமிழ் நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை.
அவர் அப்போது டெல்லியிலிருந்து தனி விமானத்தில் மூலமாக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர் அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காரில் பயணித்து சென்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.