நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் வட கொரியா வீரர்கள் பதக்கம் வென்றவுடன், தென்கொரியா வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் இப்போது வட கொரியாவில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் வடகொரியா வீரர்களை தொடர்ந்து கண்காணிக்க அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள் மேக்கப், உடையிலிருந்து திரைப்படம் பார்ப்பதுவரை மக்களின் சொந்த விஷயத்தில் கூட அரசின் தலையீட்டு இருப்பதுபோல சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இங்கு தேர்தல் என்பது நடத்தப்படுவது இல்லை. வொர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் நார்த் கொரியா (Workers Party of North Korea) என்ற கட்சியை சேர்ந்தவர்கள் தான் காலம் காலமாக அதிபராக உள்ளனர். அதாவது கிட்டத்தட்ட மன்னராட்சி போலத்தான் அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
வடகொரியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக செயல்படுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதோடு அமெரிக்காவுக்கு அடிக்கடி மிரட்டல் விடும் செயலையும் வடகொரியா மேற்கொண்டு வருகிறது.
இவர் பல கட்டுப்பாடுகளை வழங்குவதால், உலக நாடுகள் அவரின் செயல்களை எதிர்த்தே வருகின்றனர். ஆனால், அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார்.
சமீபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் கே பாப் பாடல்கள் மற்றும் 3 திரைப்படங்கள் பார்த்தார். அதாவது கே பாப் (K Pop) என்பது தென்கொரியாவில் உருவான ஒரு பிரபலமான கொரியா இசை பாடல்களாகும். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் பிரச்சனை உள்ள நிலையில் இந்த பாடல்களை கேட்க கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். இதனால், அந்த இளைஞர் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக கூறி தூக்கிலடப்பட்டார்.
தென்கொரியாவின் பாடல்களை கேட்டதற்கே தூக்கு தண்டனை விதித்த நிலையில், தென்கொரியா வீரர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தால்?
இப்படி ஒரு கொடூரமான ஆட்சிக்கு மத்தியில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு வீரர்களை அனுப்புவது வியப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் அனுப்பிவைக்கப்படும்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தனது நாட்டு வீரர்கள், பகமை நாட்டு வீரர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது என கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் வடகொரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி ஜாங்க் சிக் மற்றும் கிம் கும் யாங்க் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
இந்த போட்டியில் தென் கொரிய வீரர்கள் வெண்கலம் வென்றார்கள். முதல் பரிசை சீனா வென்றது. போட்டி முடிந்ததும் வடகொரியா வீரர்கள் இருவரும் தென் கொரிய வீரர்களுடன் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். உலக நாடுகள் இதனை வரவேற்றாலும், வட கொரியா சினம் கொண்டது. நாடு திரும்பியதும் அந்த வீரர்கள் வடகொரியா அரசின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மூன்று விதமான கண்காணிப்புகளுக்கு பிறகு எந்தவித தண்டனை வேண்டுமென்றாலும் வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.