பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் 18ம் தேதி கோவை வரவுள்ளார். அவரின் வருகையையொட்டி இன்று முதல் மார்ச் 19ம் தேதி வரை கோவையில் ட்ரோன் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில இடங்கள் ரெட் ஜோனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் பல முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காவிட்டாலும் கூட தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கின்றது. இதனையடுத்து பிரதமர் மோடியும் தனதுப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்துக்கொள்ள பிரதமர் வருகை தருகிறார். அதேநேரத்தில் லோக்சபா தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்தாண்டு பிரதமர் மோடி இதுவரை 5 முறை தமிழகத்திற்கு வந்துவிட்டார். கடந்த மாதம் 27ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோவை மற்றும் பொள்ளாச்சி என இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆகையால் பிரதமர் மோடி 18ம் தேதி வருகை தருகிறார். எப்போதும் பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் மோடி இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யவுள்ளார். மோடி வருகையை முன்னிட்டு பா.ஜ.க-வினர் பல முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கூறியதாவது, “பிரதமர் மோடி வரும் 18ம் தேதி கோவையில் உள்ள கவுண்டம்பாளையத்தில் ரோடு ஷோ நிகழ்வைத் தொடங்கி வைக்கவுள்ளார். அங்கிருந்து மேட்டுப்பாளைய சாலை வழியாக ஆர்.எஸ் புரம் சென்று அங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் சந்திப்பு அருகே இந்த ரோடு ஷோ நிகழ்வை முடித்துவைக்கவுள்ளார்“ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து கோவை முழுவதும் இன்று முதல் மார்ச் 19ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்கள் ரெட் ஜோன் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் 18ம் தேதி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.