இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
டெல்லியிலிருக்கும் பிரகதி மைதான வளாகம், 'பாரத் மண்டபம்' என்று பெயர் மாற்றப்பட்டு, மறுவடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட இந்த புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.திறப்பு விழாவை ஒட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தாம் முதன்முறை ஆட்சி அமைக்கும்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்ததை சுட்டிக்காட்டினார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். ,இந்நிலையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றும் தாம் மீண்டும் பிரதமராக ஆட்சியமைக்கும்போது, இந்தியாவை 3வது இடத்திற்கு கொண்டு செல்வேன் என சூளுரைத்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் பதின் மூன்றரை கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் நலத்திட்டங்களே இதனை சாத்தியமாக்கியதாக தெரிவித்தார்.கடமைப் பாதையைப் போன்று, பாரத் மண்டபம் என்ற பெயர் மாற்றத்திற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, நல்ல விஷயங்களை தடுத்து, அதன் மீது அவதூறு பரப்புவதே சிலரது குணம் என விமர்சித்தார்.