செய்திகள்

பணி நிரந்தரம் வழங்கக்கோரிய செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

சேலம் சுபா

கொரானா பெருந்தோற்றுக் காலத்தில் மக்களின் பெரும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் மருத்துவத்துறையில் பணியாற்றிய மனிதநேயமுள்ள நர்சுகள் எனப்படும் செவிலியர்கள். அச்சமயத்தில் அதிக எண்ணிக்கையில் நர்சுகள் தேவைப்பட்டதால் அரசு தற்காலிகமாக அரசு மருத்துவ மனைகளில்  அவர்களை பணியமர்த்தியது. ஆனால் தொற்று நேரத்தில் தேவைப்பட்ட சேவை தற்போது தேவையில்லை எனும் காரணத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொண்டனர் . அதன் விபரம் இதோ:

        கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தற்காலிகமாக 2400 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும்  66 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 14 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிக நர்சுகள் கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
          இதையடுத்து பணி நீட்டிப்பு வழங்கக்கோரி தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்ட நர்சுகள் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். முதல் நாள் பணி நியமனம் வரும்வரை காத்திருப்போம் என்று 100க்கும் மேற்பட்ட நர்சுகள் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு ஆதரவாக 50க்கும் மேல் சக நர்சுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் வந்து அவர்களுடன் இணைந்து  பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து அந்த சாலையை வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து அடைப்பு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து தற்காலிக நர்சுகள் சேலம் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு கட்டடம் எதிரியுள்ள சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களுடைய போராட்டம் நேற்று மூன்றாவது நாளாக நீடித்தது. அப்போது நர்சுகள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் நர்சுகள் தெரிவித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் போராட்டம் நடத்திய வர்களிடம் பேச்சு  வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதை அடுத்த தற்காலிக நர்சுகள் 133 பேரை போலீசார் கைது செய்தனர். 

      தற்போது தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை வாபஸ் செய்த நர்சுகள் அவரவர் வீடுகளுக்கும் ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது.

       இது குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட நர்ஸ் ஒருவர் “கொரானா காலத்தில் எங்களைப் பணியில் அமர்த்தி ஊதியம் தந்தனர். பணிக்காலம் முடிந்து விட்டதாக கூறி இப்போது எங்களை பணி விலக்கம் செய்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. கொரானா காலத்தில் தன்னலமற்று பணிசெய்த எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க வேண்டுகிறோம். மேலும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எங்களை அமர்த்தவும் கோருகிறோம்” என்கிறார்.

        இவர்களின் கோரிக்கை நியாயமானதுதானே? வாழ்வின் ஆதாரமான பணியை இவர்களுக்கு வழங்கினால் நல்லது. அரசு கவனிக்குமா? 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT