புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் முட்டைகள் வெளிசந்தையில் விற்பனை செய்வதை தடுக்க முட்டையில் அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை போல் புதுச்சேரி அரசும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவை பெங்களூரை சேர்ந்த சைவ தொண்டு நிறுவனம் அளித்து வருகிறது. முட்டை மட்டும் அரசின் சமையல் கூடத்தில் இருந்து அளிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுடன் முட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார்.
இதன் அடிப்படையில் இன்று முதல் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பணி துவங்கியது.அதன்படி புதுச்சேரியில் உள்ள 293 அரசு பள்ளிகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் என 1,56,000 முட்டைகள் வழங்கப்படுகிறது. இவை குருசுகுப்பம்,ஏம்பலம், கலீத்தீர்தாள்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற முட்டை தரம் சோதித்த பிறகு அதில் அரசின் முத்திரை வைக்கப்படுகிறது.
மேலும் பள்ளிக்கு அனுப்பப்படுகின்ற முட்டைகளை வெளி சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முட்டையின் மேல் முத்திரை வைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள 293 அரசு பள்ளிகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் என 1,56,000 முட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுச்சேரி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முட்டையில் வைக்கப்படும் (MDM-PDY) என்ற சீலுக்கு "புதுச்சேரி மதிய உணவுத்திட்டம்" என்பது பொருள்.