பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு ஆயிரக்கணக்கான நெல்மணிகள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்மாக உறுதிப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 3வது நாளை எட்டியுள்ளது.
பஞ்சாப் உட்பட வடஇந்தியாவில் பல பகுதியில் கடந்த பல நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதம் மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தினை பஞ்சாப் மாநிலத்தில் கிஷான் மஷ்தூர் சங்ஹர்ஸ் கமிட்டி, பாரதிய கிஷான் யூனியன் (புரட்சிகர), பாரதி கிஷான் யூனியன் (ஏக்டா ஆஸாத்), ஆஸாத் கிஷான் கமிட்டி டோபா, பாரதி கிஷான் யூனியன் (பெஹ்ரம்கே), பாரதி கிஷான் யூனியன் (ஷாகித் பகத் சிங்) மற்றும் பாரதி கிஷான் யூனியன் (சோட்டு ராம்) உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் மூன்று நாட்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக ஃபரித்கோட், சாம்ராலா, மோகா, ஹோசியார்பூர், குர்தாஸ்புர், ஜலந்தர், டர்ன் டாரன், பாட்டியாலா, ஃபரோஸ்பூர், பதின்டா மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கடந்த வியாழக்கிழமை தொடங்கி இப்போராட்டம் நடந்து வருகிறது.
விவசாயிகளின் இந்தப் போராட்டாத்தினால் பஞ்சாபில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளன, தடம் மாற்றி விடப்பட்டுள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்தினால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.