நம் பாசத்திற்குரியவர்கள் இறந்துபோனால் அவர்களின் நினைவுகளால் பாதிக்கப்பட்டு, மனம் வேதனையில் ஆழ்ந்து அவர்களை மறக்க இயலாமல் நீண்ட வருடங்கள் தவிப்போம். சிலர் இறந்தவர்களின் நினைவாக அவர்களின் பொருள்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்து மகிழ்வார்கள். இன்னும் சிலர் அவர்களின் உருவத்தை எந்த வடிவிலாவது உருவாக்கி அவற்றைப் பார்த்து திருப்தி அடைவார்கள். ஆனால், டெக்னாலஜியை வைத்து இறந்த மகனின் கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து அவரின் நினைவுகளுக்கு உயிரூட்டிஇருப்பது நெகிழ்ச்சியைத் தருகிறது. இதோ அவர்களைப் பற்றிய செய்தி...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குறயாச்சிரா பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். ஓமனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி லீனா அங்குள்ள இந்தியப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது மகன் ஐவின் பிரான்சிஸ் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐவின் பிரான்சிஸ் பேட்மிட்டன் விளையாடும்போது துரதிஷ்டவசமாக இறந்தார். அப்போது அவரது வயது 26 . ஐவின் டாக்டராக மட்டுமின்றி இசை, விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறந்த மருத்துவராகவும் சமூகத்தில் பிரபலமாகவும் அறியப்பட்டார் ஐவின்.
திறமைசாலியான மகனை இளம் வயதிலேயே பறிகொடுத்தாலும் வெற்றிகரமாக விளங்கிய அவரது வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தர வேண்டும் என்று ஐவினின் பெற்றோர் எண்ணினர். அதற்கன தேடலில் ஐவினின் சகோதரியான இவ்லின் பிரான்சிஸ் சொன்ன யோசனைப்படி குறியாச்சிரா செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் உள்ள ஐவின் கல்லறையில் க்யூஆர் கோடு ஒன்றை பதித்துள்ளனர். அங்கு சென்று அதை போனில் ஸ்கேன் செய்தால் ஐவினின் புகைப்படம், கல்லூரியில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், நண்பர்கள் வட்டம், அவரின் கீபோர்டு, கிட்டார் நிகழ்ச்சிகள் மற்றும் அவரைப் பற்றிய விவரங்கள், அவர் செய்த ஆக்கபூர்வமான பணிகள் என்று பல சுவாரஸ்யமான செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு இணைய தளத்தையும் பிரான்சிஸ் குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து ஐவினின் தந்தை பிரான்சிஸ் கூறுகையில் “ஐவின் பல நபர்களின் தகவல்களை க்யூஆர் கோடுகளாக உருவாக்கி எனக்கு அனுப்பி வைப்பார். அதேபோல க்யூஆர் கோடு மூலம் அவரின் நினைவுகளுக்கு உயிரூட்ட விரும்பி அதற்காக மகனைப் பற்றிய அத்தனை தகவல்களையும் தொகுத்து அவற்றைக் காணும்படியாக க்யூஆர் கோட் உருவாக்கி கல்லறையில் பதித்துள்ளோம். ஐவினின் வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை நாங்கள் செய்துள்ளோம் என்றார்.
உண்மைதான். பெற்றோரின் இந்த புதுமைச் செயலானது காலங்கள் கடந்தாலும் ஐவினின் கல்லறையில் பதித்துள்ள க்யூஆர் கோடு அவரின் செயல்களை விளக்கி அவருக்கு மலரஞ்சலியை செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.