'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவரும் தீவிர போதகருமான அம்ரித்பால் சிங்கின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை அவர் காவல்துறையில் சரணடைந்ததாகவும், ஊடக செய்தி அறிக்கைகள் கூறுவது போல் அவர் போலீஸாரால் வலிந்து கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
'வாரிஸ் பஞ்சாப் தே' என்பது ஒரு 'சீக்கிய-பிரிவினைவாத அரசியல் குழு' ஆகும், இது 'சுதந்திர காலிஸ்தான் கோரிக்கைக்கான காரணத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்கிறது.'
"அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துவோம்" என்று அம்ரித்பாலின் மாமா கூறினார்.
அம்ரித்பாலின் தந்தை தர்செம் சிங், போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் தனது மகனின் பணியை சமூகம் (அவர்கள் கூற்றுப்படி சங்கம்) தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவரது மகன் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய தர்செம் சிங், "நாங்கள் அதை ஊடகங்கள் மூலமாகத் தான் அறிந்தோம். நாங்கள் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அவர் இன்னும் சீக்கிய உடையை அணிந்துள்ளார். அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அவர் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் காவல்துறையால் துன்புறுத்தப்பட்ட அனைத்து மக்களுடனும் நான் இருக்கிறேன்." என்றார்.
அம்ரித்பாலின் தாய் பல்விந்தர் கவுர், தனது மகனைப் பற்றி பெருமைப்படுவதாகக் கூறினார். "அவன் ஒரு போர்வீரன். சிங்கம் போல் சரணடைந்தான்" என்றார்.
"கல்சா வீரைத் தொடங்க சங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போலீஸ் அப்படியும் இப்படியுமாக எதை வேண்டுமானாலும் சொல்கிறது. அதோடு அரசாங்கம் அவருடைய புகழை கெடுக்க முயற்சிக்கிறது. நாங்கள் இப்போது சிறைக்குச் சென்று அவரைச் சந்திப்போம். அவருடைய மனைவி கிரண்தீப் கவுரும் எங்களுடன் அவரைப் பார்க்க சிறைக்கு வருவார்," என்று அவர் கூறினார்.
அவரது மாமா சுக்செயின் சிங், பஞ்சாப் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், குடும்பம் இந்த வழக்கை சட்டரீதியாக போராடும் என்றார்.
"அம்ரித்பால் சிங் சரணடைந்ததை இன்று காலை அறிந்தோம். அவர் போலீஸ் காவலில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். கடைசியாக, இக்கட்டான நிலை தீர்ந்தது. நாங்கள் அவரை சிறையில் சந்திப்போம்.'' என்றார்.
அம்ரித்பால் சிங் காவல்துறையில் சரணடையுமாறு பெரும் அழுத்தத்தில் இருந்தாரா? பிரிட்டிஷ் நாட்டவரான அவரது மனைவி கிரண்தீப் கவுர் லண்டனுக்குச் செல்ல முயன்றபோது அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது "கைது" விஷயம் வெளி வந்துள்ளது. கிரண் தீப் கவுர் விசாரிக்கப்பட்டு ஜல்லாபூர் கேரா கிராமத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தார். கவுர் மாநில காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தார். காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க உதவியதில் தன் மனைவி சம்பந்தப்பட்டு விடுவாரோ என்ற பயத்தை அவர் உள்ளூர வளர்த்திருக்கலாம். மேலும், அவர் பெற்றதாகக் கூறப்படும் வெளிநாட்டு நிதி குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கவுரின் விசா ஜூலை வரை செல்லுபடியாகும். ஆனால் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்த்ததால், அவர் உடனடியாக இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என்று கவுர் விரும்பினார்.
இதற்கிடையில், லூதியானாவின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு, "தனது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டபோது அவர் (அம்ரித்பால்) குரல் எழுப்பவில்லை. இப்போது அவரது மனைவி தடுக்கப்பட்டபோது அவர் வெளியில் வந்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
அஸ்ஸாமில் உள்ள திப்ருகர் மத்திய சிறைக்கு அம்ரித்பால் மாற்றப்பட்டார், அங்கு அவரது கூட்டாளிகள் 9 பேர் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர்.