Rahul Gandhi 
செய்திகள்

ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியா? உடைந்தது சஸ்பென்ஸ்!

பாரதி

ஏற்கனவே, ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், கட்சித் தலைவர்கள் பரப்புரை என தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி 102 தொகுதிகளில், லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதாவது, தமிழகம், உத்தரகண்ட், அருணாசலபிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. அதாவது, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

அந்தவகையில், காங்கிரஸ் கட்சி வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலியில், அக்கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. கடந்த தேர்தலில், ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று வரை ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி நீடித்து வந்தது.

இன்றுடன் அந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இந்தநிலையில்தான் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில், ஏற்கனவே ராகுல் காந்தி போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், ரேபரேலியில் இன்று மனுதாக்கல் செய்யவுள்ள இவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது அதிகாரப்பூர்வமானது.

இதனையடுத்து, இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT