ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சையினை பெறுவதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது . அதில் 70 ஐசியு படுக்கைகள் தேவையான வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது . அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்தனர். இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது., ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக பயணிகளின் உடல்களுக்கு சென்னையில் உடற்கூராய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள், சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். தற்போது ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் பாதராக் பகுதியில் இருந்து புறப்பட்டது. பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக நாளை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விபத்து குறித்து உதவி வழங்குவதற்காக சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சிறப்பு உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) மற்றும் சென்னை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படுவோர் 044-25330952, 044-25330953 மற்றும் 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.