ரமணியம்மாள் என்று சொன்னதுமே நமக்கு "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்'’ என்று பாடிய பெங்களூர் ரமணியம்மாள்தான் நினைக்கு வரும்.
சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்க திடீரென்று ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பாட்டு போட்டியில் பாட வந்தார். கணீரென்ற குரலில் பாடி அனைவரையும் அசத்தி முதல் பரிசை தட்டிச் சென்றார். இவரும் ஒரு ரமணியம்மாள் தான். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ரமணியம்மாள் என்றால் இவர்தான் நினைவுக்கு வருவார். தனது குரலால் அனைவரையும் கவர்ந்தார்.
வீட்டு வேலை பார்த்து வாழ்க்கை நடத்துவது நகரங்களில் இருக்கும் பெண்களுக்கு பழகிப் போன ஒன்று. வங்கியில் கூட்டிப் பெருக்கி முடித்து விட்டு பிறகு ஒரு ஜவுளிக்கடை அதற்கடுத்ததாக வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை மதுரையில் நான் பணிபுரிந்த போது சந்தித்திருக்கிறேன். அவர்கள்
40 வயதுக்குட்பட்டவர்கள். நம் தலையெழுத்து இது தான் என்று முடிவு பண்ணி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள் பலர். விதி விலக்காக சிலர் மட்டுமே தாங்கள் வசிக்கும், வேலை பார்க்கும் வீதிகளைத் தாண்டி ஊரைத் தாண்டி தடைகளை உடைத்து மிகப் பெரிய வெற்றியை பெறுவார்கள். அப்படி ஒருவர் தான் இந்த ரமணியம்மாள். இசை உலகிற்கு அழைத்து வரப்படும் வரம் பெற்றார். She came, She saw She conquered... என்று மாற்றி எழுத வைத்தார்.
திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. ரமணியம்மாள் ராணியம்மாளாக ஜொலிக்க ஆரம்பித்தார். தங்கள் உழைப்பால் உயர்ந்த இடம் பிடித்த இவர் நிரந்தர ராணியாக இசை ராணியாக நின்றார். புதுமைப் பெண்களுக்கு என்று தனியாக எந்த இலக்கணங்களும் வகுக்கப்படவில்லை. தங்களின் உள்ளே ஒளிந்திருக்கும் ஒரு திறமையால் 60 வயதுக்கு மேலும் சாதிக்கிறார்களே அவர்களும் பாரதி போற்றும் புதுமைப் பெண்களே.
இன்று அவர் மறைந்திருக்கலாம், அவர் ஆன்மா முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் வீட்டிலும் கண்ணாடியாக இருந்து 'என்னைப் போல நீயும் வெல்வாய்' என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் முகம் பார்த்து சொல் லிக்கொண்டே இருக்கும்.