கடந்த ஆகஸ்ட் 9 அன்று நகரின் RG கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வங்காள மாநிலச் செயலகமான நபன்னாவிற்கு முன், மாநில முதல்வர் மம்தா உறுதியான நடவடிக்கை எடுக்காததாகக் கூறி எதிர்ப்பு ஊர்வலம் நடத்த மாணவர் அமைப்பான பாஸ்கிம் பங்கா சத்ர சமாஜ் மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அமைப்பான சங்க்ராமி ஜௌதா மஞ்சா ஆகியவை அழைப்பு விடுத்தன.
இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பேரணியின் போது வன்முறையை உருவாக்க போராட்டக்காரர்கள் சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். கொல்கத்தா காவல்துறை 6,000 போலிஸ் பாதுகாப்புடன் நபன்னாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
எதிர்ப்பாளர்கள் செயலகத்தை எந்த வழியிலிருந்தும் முன்னேற விடாமல் தடுப்பதற்காக போலிஸ் அனைத்து பக்கங்களும் நிறுத்தப்பட்டனர். போராட்டக்காரர்களை கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தகர்க்க முடியாத வகையில் தடுப்புகள் தரையில் பற்றவைக்கப்பட்டு கிரீஸ் பூசப்பட்டிருந்தது.
மாநிலச் செயலகம் நபன்னாவை நோக்கி இன்று மதியம்1 மணியளவில், ஹவுரா மற்றும் கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிவகுப்பு தொடங்கியது, ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தியக் கொடியை அசைத்து, மாநில அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
ஹவுராவில் உள்ள சந்த்ராகாச்சியில் முதலில் மோதல்கள் தொடங்கியன. அங்கு போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஒன்றை உடைத்ததால், போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை போலீசார் பிரயோகித்துள்ளனர்.
இதற்கிடையில், போராட்டக்காரர்கள் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்திற்குச் சென்று போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கினர். ஹவுராவில் உள்ள ஃபோர்ஷோர் சாலையில், போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால், அவர்கள் மீது தடியடி நடத்தினர். வித்யாசாகர் பாலம் செல்லும் வழியில் ஹேஸ்டிங்ஸ் அருகே கொல்கத்தா பக்கத்தில், எதிர்ப்பாளர்கள் தடையை உடைக்க முயன்றது தோல்வியடைந்தது.
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இங்கும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நடந்தது. பிறகு போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
பல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீஸ் தடுப்புகளை உடைத்து ஊர்வலம் நடத்த முயன்றனர், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போராட்டக்காரார்களை விரட்டினார்கள். போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கல் வீசி தாக்கினார்கள். இதனால் கொல்கொத்தா நகரமே வன்முறைக்கு இலக்காகி போர் களம் போல மாறியுள்ளது.