செய்திகள்

அரசியலில் ஓய்வு என்பதே இல்லை: லாலு

ஜெ.ராகவன்

ரசியல்வாதிகளுக்கு ஒய்வு என்பதே இல்லை என்று பிகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜித்பவார், அதிரடியாக தமது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தார். துணை முதல்வரான அவர், ஒரு பேட்டியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமது உறவினருமான சரத்பவாருக்கு 83 வயதாகிவிட்டதால் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று இளைய தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதுதில்லிக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக வந்திருந்த லாலு பிரசாத், லாலு பிரசாத் அரசியலில் ஓய்வு என்பதே இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் அஜித்பவாருக்குமே வயதாகி வருகிறது. அவர், அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தயாரா? என்று நகைச்சுவையாக கேட்டார்.மகாராஷ்டிரத்தில் அரசியல் விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமது ஆதரவாளர்களுடன் சிவசேனை-பாஜக ஆட்சியில் சேர்ந்த அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக கூறினார்.

தமது உறவினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், 2014 ஆம் ஆண்டு வாய்ப்பிருந்தும் முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும் சரத் பவாருக்கு 83 வயதாகிவிட்டதால் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறவேண்டும். கட்சித் தலைவர் பதவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதில் அரசியலிலிருந்து ஓய்வுபெறுகின்றனர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மூத்த தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று இளைய தலைவர்களுக்கு வழிவிட வேண்டும். “உங்களுக்கு (சரத் பவாருக்கு) 83 வயதாகிறது. எப்போது நீங்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போகிறீர்கள். நீங்கள் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்து வாழ்த்துங்கள். நீண்டநாள் வாழ நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்” என்றும் அஜித்பவார் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி கருத்து தெரிவித்த லாலு, 17 அரசியல்கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியில் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி பா.ஜ.க.வை தோற்கடிப்பது உறுதி என்றார். எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்டதற்கு, ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். அவர் பிரதமராவது உறுதி.

பிரதமர் இல்லத்தில் அவர் தனியாக இருப்பது சரியல்ல. எனவே அவர் அதற்கு முன்னதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.2024 தேர்தலில் மகா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று கேட்டதற்கு, நாங்கள் 300- இடங்களுக்கு குறையாமல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்றார் லாலு.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT