செய்திகள்

தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை: ராஜினாமாவை திரும்பப் பெற்றார் சரத் பவார்!

கல்கி டெஸ்க்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, தமது கட்சித் தொண்டர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அதிர்சியைக் கொடுத்தார். அதோடு, கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க, கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்தார்.

அந்தக் கமிட்டி இன்று காலை கூடி, கட்சியின் அடுத்தத் தலைவர் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் ஒன்றை அவர்கள் நிறைவேற்றினர். இந்தத் தீர்மானம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். அது மட்டுமின்றி, அந்தத் தீர்மான நகலோடு சரத் பவாரை சந்தித்து இதுகுறித்துப் பேசப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித் பவார், பிரஃபுல் படேல், சகன் புஜ்பால் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது அவர்கள் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடி எடுத்திருக்கும் முடிவு குறித்தும், தீர்மானம் குறித்தும் சரத் பவாரிடம் எடுத்துக் கூறினர். அவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக சரத் பவார் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது குறிப்பிட்டார்.

இது குறித்து அவர், “எனது முடிவால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அதோடு, தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஒரு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு கட்சித் தொண்டர்களும் எனது நலம் விரும்பிகளும் எனது ராஜினாமாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் உணர்வுகளுக்கு என்னால் மதிப்பளிக்காமல் இருக்க முடியவில்லை. என் மீது வைத்திருக்கும் பற்று மற்றும் நம்பிக்கை என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. எனவே, கட்சி கமிட்டி எடுத்த முடிவை ஏற்று எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுகிறேன். அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்" என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த ஒரு பிரச்னை முடிவுக்கு வருகிறது.

பாம்பு கடித்தவருக்கு முதலுதவி என்ன தெரியுமா?

கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!

கோடை காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 எலக்ட்ரோலைட் பானங்கள்!

கொல்லிமலையை ஆட்சிபுரியும் எட்டுக்கை அம்மனைப் பற்றி தெரியுமா?

வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 

SCROLL FOR NEXT