சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவிலில் 42 நாட்கள் மண்டல பூஜை காலம் நேற்றுடன் முடிந்ததையடுத்து, நேற்றிரவு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை மண்டல பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம், கடந்த 23-ம் தேதி பத்தனம்திட்டா ஆறுமுகம் பார்த்தசாரதி கோவிலிலிருந்து புறப்பட்டு, 26-ம் தேதி சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது.
மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய இந்த தங்க அங்கி, நேற்று முன் தினம் ஶ்ரீஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அதையடுத்து மன்டல பூஜையின் நிறிவு நாளான நேற்று பிற்பகல் மீன ராசியில் உள்ள சுப முகூர்த்தத்தில் திரளான பக்தர்களின் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை நடந்து முடிந்து நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் வழக்கமான பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து நடை அடைப்பிற்கு முந்தைய அபிஷேகம் மற்றும் சடங்குகள் நடந்தன. தொடர்ந்து சங்கு இசை முழங்க, நம்பூதிரிகள் ஹரிவராசனம் பாட, 42 நாட்கள் மண்டல பூஜைக்காலம் முடிந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகர விளக்கு பூஜையின்போது, ஜனவரி 14-ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் மற்றும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் வழிபாடு என மகர விளக்கு பூஜைக்காலம் முடிந்து ஜனவரி 20-ம் தேதி நடை சார்த்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.