தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டம் பின்வாங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கான குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரனை கமிஷன் நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கை மீதான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யகோரி ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற சர்வதேவ போட்டிகளில் நாட்டிற்கு பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகஷ் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால், பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு கூட செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் புதிய நாடாளுமன்ற திறப்பின்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடபோவதாக தெரிவித்தனர். இதனால், அவர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதன்பின்னர் உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது. அதேபோல், பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை என்றால், தாங்கள் பெற்ற ஒலிம்பிக் மற்றும் சர்வதேச பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதா வீரர்கள் அறிவித்தனர். ஆனால், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாய சங்க கூட்டமைப்பினரின் வலியுறுத்தல் காரணமாக பதக்கங்களை கங்கையில் வீசும் போராட்டம் கைவிடப்பட்டது.
அதேநேரம் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யகோரி சர்வதேச மற்றும் தேசிய அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. இதனால் டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்தனர். இந்நிலையில் நேற்றையை தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களை சந்தித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிடப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், போராட்டத்தை கைவிட்டுவிட்டதாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் நீதிக்கான யுத்தத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை என்றும் போராட்டத்தடன் எனது ரயில்வே பணியையும் மேற்கொள்வேன். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் வாபஸ் பெற்றதாக பரவும் தகவல்களும் பொய் என வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.