சேலம் மாநகரின் இதய பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் இருக்கிறது. கடந்த 1990-ம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதிகளவில் வணிகர்கள் வந்து செல்ல, சேலம் காலப்போக்கில் அசுர வளர்ச்சி பெற்றது. இதனால் நகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, பழைய பேருந்து நிலையத்தில் அதிக வாகனங்கள் நிறுத்த முடியாமல் வாகனங்களின் நெரிசல் அதிகரித்தது. அதே நேரம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. அதே நேரத்தில் சுமார் 63 ஆண்டுகள் பழமையான பழைய பேருந்து நிலையத்தின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் சேதம் அடைந்து காணப்பட்டன. இதனால் பழைய பேருந்து நிலையத்தை விரிவுப்படுத்தக் கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்ற முடிவு செய்யப் பட்டது. இதற்காக ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இதற்கான பணியை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து பழைய பஸ் நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர கடைகள், அரசு அலுவலகங்களும், மொட்டை மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
மேலும் பஸ்டாண்டில் சோலார் பேனல் அமைக்கப் படுகிறது. இதைப்பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது .போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முறையில் மாநகராட்சி மாநகரில் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு ரூபாய் 96.53 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளது. வைஃபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறையும் பேருந்து நிலையத்திற்கு 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 11500 சதுர மீட்டரில் தரைத்தளம் அமைக்கப்பட்டு 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 29 கடைகளும் 11 அலுவலகங்களும் கட்டப் பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும் இரண்டாம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு 26 பேருந்துகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தளத்தில் 11 கடையும் ரயில் நிலையத்தில் உள்ளது போல் வைஃபை இணைப்பு வசதியும், ஏசி வசதியும், பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் இதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என அதிகாரிகள் கூறினர்.