அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்காக கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவு நேரத்தில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதைத் தொடர்ந்து அவர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் நான்கு அடைப்புகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து அவருக்கு உடனே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து, நீதிமன்ற ஆணையின்படி அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதேநேரம், அமலாக்கத்துறையின் வழக்கின்பேரில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரியதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதற்குள் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் மருத்துவ ஓய்வில் இருந்ததால் அமலாக்கத்துறையால் விசாரணை செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதியோடு செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார். அப்போது அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி, இம்மாதம் 12ம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து, மேலும் நீதிமன்ற காவலை நீட்டிப்பது தொடர்பான விசாரணைக்காக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே மீண்டும் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு வரும் ஜூலை மாதம் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை முதல் வகுப்பில் அடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் புழல் சிறையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.