செய்திகள்

ஆளும் கூட்டணியில் அஜித்பவார் சேர்ந்துள்ளதால் ஷிண்டேவுக்கு ஆபத்து!

ஜெ.ராகவன்

அஜித் பவார் ஆளும் சிவசேனை - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துள்ளதால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்குத்தான் ஆபத்து என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு காரணமாக ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்கலாம் என்பதால் ஆட்சியில் நீடிப்பதற்கு வசதியாக பா.ஜ.க. முன்கூட்டியே இந்த ஏற்பாடைச் செய்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இது ஒன்றும் ஷிண்டேவுக்கு நல்ல செய்தி அல்ல. ஷிண்டேயின் அதிகாரங்கள் குறைக்கப்படலாம். இனி அஜித் பவாருக்கு முக்கியத்துவம் தரப்படலாம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் படேல் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தபிறகு ஷிண்டே முதல்வராக பா.ஜ.க. அனுமதித்தது. ஆனால், தொடக்கத்திலிருந்தே இரு தரப்பினருக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் பெரியண்ணன் போல் செயல்படுவதாக ஷிண்டே

பிரிவினர் அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தனர். தற்போது ஷிண்டே பிரிவைச் சேர்ந்த 10 அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. அதாவது அமைச்சரவையை மாற்றியமைத்து அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு அதில் இடம் கொடுக்க விரும்புகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ஷிண்டே பிரிவினர், அஜித்பவார் தனது ஆதரவாளர்களுடன் கூட்டணியில் சேர்ந்தால் நாங்கள் ஆளும் கூட்டணியில் இருக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஷிண்டே மற்றும் அஜித் பவாரை தில்லியில் சந்தித்து பேசியதை அடுத்து பிரச்னை அப்போது தாற்காலிகமாக தீர்த்துவைக்கப்பட்டது.

இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரை, தமது கூட்டணியில் இடம்பெறுவதை ஷிண்டே வரவேற்றுள்ளார். இரட்டை என்ஜின் கொண்ட அரசு இப்போது மூன்று என்ஜின்கள் கொண்ட அரசாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். ஒரு முதல்வரும், இரண்டு துணை முதல்ர்களும் இருப்பதால் மாநில வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க. கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் ராகுல்காந்தி சித்தரிக்கப்படுவதை

அஜித்பவார் விரும்பவில்லை. அதனால்தான் அவர், தனது ஆதரவாளர்களுடன் பாஜக-சிவசேனை கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT