தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, அதிமுக எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதையடுத்து சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றியது குறித்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். அதில் அவர் கூறியதாவது:
இன்று சட்டப் பேரவை தொடங்குமுன்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ்-சுக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வலியுறுத்தினர்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி. மற்றபடி அந்தந்த கட்சிக்குள் பிற பதவிகள் அக்கட்சிகளின் விருப்பத்துக்கேற்பவே உள்ளன.
சட்டவிதிப்படி துணைத் தலைவர் என்ற பதவி இல்லாததால், அந்த பதவியை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் சட்டசபையில் இருக்கைகள் ஒதுக்குவது என்பது எனது முடிவு எனவே, அதில் யாரும் தலையிட முடியாது.
இதை தெரிந்து கொள்ளாமல் அதிமுக எதிர்க்கட்சி தலைவரும், எம்எல்ஏக்களும் பேரவை மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டன.
-இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.