செய்திகள்

காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - டி.ஜி.பி சைலேந்திரபாபு

கல்கி டெஸ்க்

இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்புப் படிகளை இந்த ஆண்டு முதல் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

பணியில் இருக்கும்போது பெண் காவலர்களின் மீது தவறாக நடந்து கொள்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பணியின்போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுதார்களில் 1600 நபர்களுக்கு காவல்துறையில் பணிகள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புதுப்பேட்டையில் உள்ள காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கு புதிய மின் தூக்கி மற்றும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதியை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு , சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு,

தமிழ்நாட்டில் 50 இடங்களில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடிகள் உள்ளன. தேவையான அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் அங்கு கிடைக்கும். காவல்துறையில் உள்ளோருக்கு மட்டுமின்றி தீயணைப்புத்துறை, வனத்துறை, சிறைத்துறையில் பணி செய்வோரும் அங்கு பொருள் வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் 13 இடங்களில் காவலர் மருத்துவமனைகள் உள்ளன. அங்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

காவலர்களின் சிறந்த பணியால் தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளையும் கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறோம். கடந்த ஆண்டில் பணியில் இருந்தபோது 250 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுதார்களில் 1600 நபர்களுக்கு காவல்துறையில் பணிகள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையில் இருப்போருக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

இந்த ஆண்டு முதல் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 15 நாளுக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விருகம்பாக்கத்தில் பெண் காவலர்களிடம் நடந்த சம்பவம் துரதிருஷ்ட வசமானது. இனி எதிர்காலத்தில் இந்த மாதிரி சம்பவம் ஏதும் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். தவறாக நடந்தவர்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டவுடன் உடனே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்துவிட்டோம். தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு. பெண் காவலர்களின் மீது தவறாக நடந்து கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ' என்றும் கூறினார்.

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்புப் படிகளை இந்த ஆண்டு அரசு அறிவித்துள்ளது. பெண் காவலர்களின் பிரச்சனைகளை களைய, உடல், மன நல பயிற்சிகளை வழங்க ‘ஆனந்தம்’ எனும் பயிற்சி வழங்கப்படுகிறது. காவல்துறை மூலம் மாணவர்களுக்கான ‘சிற்பி’ திட்டம் மூலமும், சென்னை காவலர்களுக்கு ‘மகிழ்ச்சி’ எனும் திட்டம் மூலமும் பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் போதைப்பொருளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்படுத்தி வருகிறோம். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த சிலர் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தால் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையோர் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணித்து வருகிறோம். சந்தேகம் உறுதியானால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT