தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலின் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான செய்திகளைப் பார்ப்போம்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் மிகவும் சிறந்த மனிதர். களத்தில் இறங்கி வேலை செய்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆனால், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி மதிப்பது என்பதுக்கூட தெரியவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் துணை முதலமைச்சர் ஆனார் என்ற செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தன. தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ,”தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். மழைக்காலத்தில் நேரடியாக களத்தில் இறங்கி மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக தமிழக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முன்மாதிரியாக முதல்வர் திகழ்கிறார்.
ஆனால், உதயநிதிக்கு எப்படி தலைவர்களை மதிப்பது என்றே தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் முதல் தலைமகனாக விளங்கும் ஆளுநரை கொச்சைப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தற்போது உள்ள அரசு பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மோசமான தனிநபர் துதி பாடும் அரசியலும், வெறுப்பு அரசியலின் உச்சகட்டமாக தனிப்பட்ட முறையில் தலைவர்களை அவமானப்படுத்துவது, கேலி பேசுவது, குறிப்பாக பெண் தலைவர்களை கூட விட்டு வைக்காமல் இகழ்வது என அரசியல் அநாகரகத்தின் உச்சகட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய மூத்த தலைவர்களே இன்று தங்கள் வாரிசுகளை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. இது தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லது கிடையாது. தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவருக்கும் வழிகாட்டும் விதமாக நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும். மேலும் ஆட்சியிலும் அரசியலிலும் நேர்மறையான அரசியலை தன் மகனுக்கு ஒரு நல்ல தலைவராக இருக்க முதல்வர் கற்றுக் கொடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.