கடந்த இரண்டு மாதங்களில் சிலைக்கடத்தல் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இதில் உடனே விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சிலைக்கடத்தல் என்பது பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 60, 70களில் அதிகரித்து சிலைத்திருட்டு சம்பவங்கள், காலப்போக்கில் மக்கள் மறந்து போகுமளவுக்கு மாறிவிட்டன. இந்நிலையில் 2016 காலத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்டட அதிரடி நடவடிக்கைகளினால் சிலைத்திருட்டு விவகாரம் மறுபடியும் சூடுபிடித்தது.
தமிழ்நாட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி, விற்பனையில் ஈடுபட்டிருந்து சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை சி.பி.ஐ கைது செய்தது. கைது செய்யப்பட்டவரை சி.பி.ஐ, தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்பிட்டார்கள். அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில்தான் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அடுத்து நீண்டநாளாக பல்வேறு வழக்குகளில் சிக்கி, தப்பித்து வந்த கலைக்கூட உரிமையாளர் தீனதயாளனை காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலனவை தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகியப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருடப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையில் பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகளை திருடி தீனதயாளன் வெளிநாடுகளுக்கு விற்று வந்திருப்பதும் தெரியவந்தது. தொடர்பில் இருந்த திருட்டுக் கும்பலை பிடிப்பதற்கான தேடல் ஆரம்பமானது. அவருடைய கூட்டாளிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி, தூத்துக்குடிய மாவட்டம் சேரக்குளம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகளை திருடியதாக சமீபத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டிருககிறார்கள். 2004 முதல் 2017 வரை நடைபெற்ற பல்வேறு சிலைக்கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2014ல் சேரக்குளத்தில் நடந்த திருட்டு முதல் 2004ல் குத்தாலத்தில் நடந்த திருட்டு வரை ஏராளமான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. குத்தாலத்தில் சோமசுந்தரேஸ்வரர் நித்தியகல்யாணி கோயிலில் திருடப்பட்ட சிலைகளில் நடராஜர், சிவகாமி அம்மன், தேவி உள்ளிட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து 11 பேர் கைது செய்யப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சிலைக்கடத்தல் தடுப்புத்துறை, வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எங்களது துறையின் மெத்தனம் காரணமாக எந்த விதத்திலும் வழக்கு விசாரணை தாமதமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்று சமீபத்தில் சிலைத்தடுப்புத் துறை கூடுதல் டி.ஜி.பி ஷைலேஷ் குமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
2017க்கு முன்புவரை ஸ்ரீவில்லிப்புத்தூர், கும்பகோணம், சென்னை என மூன்று இடங்களில் சிலைத்தடுபபு குறித்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. 2017ல் வெளியான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர், சென்னையில் நடைபெற்ற வழக்குகள் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இது சிலைக்கடத்தல் சம்பந்தமான வழக்கை பெரிதும் பாதித்திருக்கிறது.
சிலைத்தடுப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் வட தமிழ்நாட்டிலிருந்தும், தென் தமிழ்நாட்டிலிருந்தும் கும்பகோணத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. கூடுதலாக சென்னை மற்றும் மதுரையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசை சிலைக்கடத்தல் தடுப்புத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.