மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் இறக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் உள்ள குய்கி மற்றும் மெய்தி ஆகிய இனங்களுக்கு இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் 220 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 1,108 பேர் படுகாயமடைந்தனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல் 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகின, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் பல காலங்களாக அமைதியான சூழலே நீடித்து வந்தது. கடந்த வாரம் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது ஒரு படி மேலே சென்று ட்ரோன் மூலமும், ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்த துவங்கி உள்ளனர். இதில் 11 பேர் பலியாகினர்.
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் பிரேண் சிங் இல்லம் மாணவர் சங்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல்லமும் முற்றுகையிடப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் சேர்ந்து ராணுவத்தின் வாகனத்தை அடித்து திரும்ப விரட்டியதால் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் மாணவர் போராட்டத்தை கட்டுப்படுத்தவும், ஆயுத குழுக்களின் ட்ரோன் தாக்குதல் உள்ளிட்டவற்றை கண்காணித்து முறியடிக்கவும் ஜார்கண்டில் இருந்து 2 ஆயிரம் சிஆர்பிஎஃப் வீரர்கள் மணிப்பூருக்கு அனுப்பப்பட உள்ளனர். அவர்களுடன் ட்ரோன்களை சுட்டுத்தள்ளும் துப்பாக்கிகள், ஆளில்லா வான்வழி எந்திரங்களை முடக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவையும் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஐந்தாவது நாளாக இணையதள சேவையும் முடங்கியுள்ளது. இதுபோன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மணிப்பூர் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு எந்த கல்லூரியும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.