இன்று காலை போபாலில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பெட்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. முன்னதாக, ஹபீப்கஞ்ச் என்று அழைக்கப்படும் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து புது டெல்லி நிஜாமுதீன் நோக்கி இந்த ரயில் புறப்பட்டபோது இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்தத் தீ விபத்து குறித்துத் தகவல் தெரிந்ததும் பயணிகள் இடையே பெரும் பீதி ஏற்பட்டதோடு, ரயிலில் இருந்து அனைவரும் அவசர அவரசமாக அலறியடித்து கீழே இறங்கி உள்ளனர். ரயில் பெட்டியில் உள்ள ஒரு பேட்டரியில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து இருக்கின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘குர்வாய் கெத்தோரா நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் ஒன்றின் பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த ரயிலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் சிங், ஐஏஎஸ் அவினாஷ் லாவானியா உள்ளிட்ட பலரும் பயணம் செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் ராணி கமலாபதி ரயில் நிலையத்துக்கும் டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கும் இடையில் இயங்கும் இந்த ரயில் மத்தியப் பிரதேசத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வந்தே பாரத் ரயிலில் இதுபோன்ற விபத்து நிகழ்ந்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
மத்தியப் பிரதேசத்தின் ராணி கமலாபதி ரயில் நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரயில் 7 மணி 30 நிமிடங்களில் 701 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கிறது. சனிக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.