செய்திகள்

நாளை திடீர் மாவட்டச் செயலாளர் கூட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு!

கல்கி டெஸ்க்

திமுகவின் தலைமை பிரச்னையில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார் எடப்பாடி. அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களில் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் செய்தது.

இந்த நிலையில் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்து இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களையும் அங்கீகரித்து இருக்கிறது. இதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு இருந்த ஓரிரு வாய்ப்புகளும் அடைபட்டு உள்ளன. இந்த சூழலில் நாளை மாலை 5 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்து இருக்கிறது. இந்தக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

திடீரென விடுக்கப்பட்டிருக்கும் இந்த அழைப்புக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முதலாவதாகக் கூறப்படுவது, அதிமுகவின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதை கட்சியினருக்குத் தெரியப்படுத்தும் விதமாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.

அடுத்ததாக, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தினைத் தொடர்ந்து கட்சி முழுமையும் ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சட்ட ரீதியாக அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிட்டதால், கட்சியின் வளர்ச்சி பணிகளிலும், எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளிலும் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தப்படும் எனவும் தெரிகிறது.

அடுத்து, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் அண்மையில் சந்தித்திருக்கும் நிலையில், இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்தித்துப் பேசியது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது உறுப்பினர் சேர்க்கை பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் ஆலோசனைகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

அடுத்ததாக, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைப்பதற்கும் மாவட்டச் செயலாளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாகக் சொல்லப்படுகிறது.

அடுத்து, சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக திருச்சியில் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், எந்த இடத்தில் மாநாடு நடத்தலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT