இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு தைப்பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்களுடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்து வந்தனர். இது குறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூட கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னரே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.