செய்திகள்

கிழக்கு கடற்கரை பகுதிகளை கலக்கும் கோடை மழை – அக்னி நட்சத்திரத்திற்கு முன்னர் ஆறுதல் பரிசா?

ஜெ. ராம்கி

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. இன்று காலையும் மழைத் தூறல் தொடர்ந்து இருந்து வருகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கோடை மழையின் தாக்கம் இருந்து வருகிறது. தமிழகத்தின் திருச்செந்தூர் முதல் ஒடிசாவின் கொனார்க் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தரப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகமாகும்போது கோடை மழை ஒரு மணி நேரம் பெய்வதுண்டு. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததோடு, சில நாட்கள் விட்டுவிட்டும் மழை பெய்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையிலும் நேற்று முன் தினம் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்றிரவு கனமழை சில மணி நேரங்கள் நீடித்தது. காலையில் மழைச்சாரல் இருந்தது. கோடை வெப்பத்தால் நிலைகுலைந்திருந்த சென்னையில் வெப்பம் சற்று தணிந்திருக்கிறது. நாளை மறுநாள் ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரத்திற்கு ஆறுதல் பரிசாக கோடை மழை கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT