போபால் விஷ வாய்வு முதல் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வரை பெரிய வழக்குகளிலெல்லாம் வாதாடிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் சட்ட நிபுணருமான ஃபாலி எஸ் நாரிமன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
ஃபாலி நாரிமன் 1950ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக தனது பணியை ஆரம்பித்தார். இவரின் அதீத திறமையினால் 1961ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதன்பின்னர் 1971ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கினார். பிறகு 1972ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் செய்தபோது தனது பதவியை ராஜினாமா செய்தார் ஃபாலி.
இவர் தன் வாழ்நாளில் இதுவரை பல பிரபல வழக்குகளை வாதாடியிருக்கிறார். 1984ம் ஆண்டு போபால் விஷ வாய்வு சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். அப்போது இதுதொடர்பான வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்காக வாதாடினார். ஆனால் அதன்பின்னர் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பேட்டி ஒன்றில் அவரே கூறினார். அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
அதேபோல் 2014ம் ஆண்டு ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்புகளை வழங்கினார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவிற்கு 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து 22 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதாவிற்கு ஃபாலி எஸ். நாரிமன் நேரில் ஆஜராகி வாதாடி தனது சிறப்பான வாதங்கள் மூலம் ஜாமீன் வாங்கி கொடுத்தார். மேலும் இவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுத்தொடர்பான சட்ட திருத்தத்திற்கு எதிராக வாதாடினார்.
தன் பணியில் பெரிய பெரிய வழக்குகளை வாதாடிய ஃபாலி நாரிமன் தனது 95 வயதில் நேற்று உயிரிழந்தார். ஃபாலி நாரிமன்னின் மகன் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஃபாலி நாரிமன் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “இவர் வழக்கறிஞராக 70 ஆண்டுகளுக்கு மேல் பணிப்புரிந்திருக்கிறார். சுமார் 50 வருடங்கள் உச்ச நீதிமன்றத்தில் பணிப்புரிந்தார். மேலும் இவர் பல முக்கிய தீர்ப்புகளுக்கு காரணமானவர். இவர் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கு நினைவுக் கூறப்படும்” என்றார்.