உலகில் எத்தனையோ நாடுகள் இருப்பினும், இதில் மிகச் சிறந்த நாடு எதுவாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றலாம். இதற்கான பதிலைத் தேடித் தான் “யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ்” ஆண்டுதோறும் பயணிக்கிறது. இந்த இதழ் வெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில் முதலில் இருக்கும் நாடு எது? இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இயற்கை வளங்களும், கனிம வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், உலகளவில் சிறந்த நாடு என்ற பெயரைப் பெற இது மட்டும் போதாது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், சுறுசுறுப்பு, சாகசங்கள், தொழில்முனைவோர் எண்ணிக்கை, கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழும் இதனை அடிப்படையாகக் கொண்டு தான் சிறந்த நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்துகிறது.
இந்த இதழ் ஆண்டுதோறும் ஆய்வு செய்து உலகளவில் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் 2024 ஆம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்த நாடு சுவிட்சர்லாந்து. அப்படியெனில் இந்தியா எந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கிறது அல்லவா! ஆனால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 3 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது இந்தியா. இதன்படி 2023 ஆம் ஆண்டில் 30வது இடத்தில் இருந்த இந்தியா, 2024 இல் 33வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது அண்டை நாடுகளான இலங்கை மற்றும் வங்கதேசம் முறையே 56 மற்றும் 71வது இடத்தைப் பிடித்துள்ளன.
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் 2வது இடத்தையும், அமெரிக்கா 3வது இடத்தையும், கனடா 4வது இடத்தையும், ஆஸ்திரேலியா 5வது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்வீடன் 6வது இடத்திலும், ஜெர்மனி 7வது இடத்திலும், பிரித்தானியா 8வது இடத்திலும், நியூசிலாந்து 9வது இடத்திலும், டென்மார்க் 10வது இடத்திலும் உள்ளன. சுமார் 89 நாடுகள் இந்த ஆய்வில் இடம் பெற்றன. இருப்பினும், முதல் 25 இடங்களில் அதிக ஆதிக்கத்தை ஐரோப்பிய நாடுகள் தான் செலுத்தியுள்ளன.
ஆசிய கண்டத்தில் இருந்து ஜப்பான், சீனா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் மட்டுமே முதல் 25 இடங்களில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரகம் 17வது இடத்தையும், கத்தார் 25வது இடத்தையும் பிடித்துள்ளன.
வணிகம், அதிகாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ், உலகமெங்கும் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்ட பிறகே இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவைப் பார்க்கும் போது சுவிட்சர்லாந்து நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் வளர்ச்சியும் சீராக முன்னேறி வரும் நிலையில், அடுத்த ஆண்டில் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.