தமிழக சட்டப்பேரவை, ’காகிதம் இல்லா சட்டமன்றம்’ என்ற முறையில் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் இ-புக் செயலி செயல்படுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்போது பேசிய சபாநாயகர், ”தமிழ்நாடு சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டமன்றமாக முழுமையாக மாற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ’டிஜிட்டல் ஹவுஸ்’ திட்டத்தினை இன்று முதல் செயல்படுத்திடும் வகையில் உறுப்பினர்களின் மேஜைகளின் மேல் பொருத்தப்பட்டுள்ள தொடுதிரை சிறு கணினிகளில் மின் புத்தகம் (e-book) என்ற செயலி உருவாக்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த மின் புத்தகத்தினை பயன்படுத்துவதற்காக பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவை அனைத்து உறுப்பினர்களுக்கும் உருவாக்கப்பட்டு ஏற்கெனவே தொடுதிரை சிறு கணினிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உறுப்பினர்கள் மின் புத்தகத்தில் உள்ளவற்றைக் காணலாம்.
சட்டமன்ற அமைச்சக தொழில்நுட்ப அலுவலர்களுடன், பேரவை அலுவலர்களும் கடந்த சில நாட்களாக பேரவை கூடுவதற்கு முன் இ-புத்தகச் செயலியை பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளித்து வந்தனர். மேலும், பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துதலும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன் முதல் கட்டமாக கேள்வி நேரத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பற்றிய விவரம், ஹவுஸ் கண்ட்ரோலர் போர்டு மற்றும் டிஸ்ப்ளே யூனிட் மூலம் உரையாற்றும் உறுப்பினர்களின் பெயர், புகைப்படம், உரையாற்றும் நேரம் உள்ளிட்டவற்றை பேரவை மண்டபத்தில் தொடுதிரை கணினியிலும், பெரிய திரைகளிலும் காண முடியும். மேலும், கேள்வி நேரத்தில் நேரடி ஒளிபரப்பினை லைவ் ஸ்டீரிமிங் முறையிலும் உறுப்பினர்கள் தங்கள் தொடுதிரையில் நேரடியாகக் காணலாம்” என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.