தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அணி திரளும் மூத்த நிர்வாகிகள். இதனால் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் ஐக்கியமானார். பிறகு தமிழ்நாட்டு பாஜகவின் தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக பாஜகவின் முக்கியமான அடையாளமாக மாறினார் அண்ணாமலை.
அதேசமயம் அண்ணாமலை வருகைக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக பாஜகவின் ஒருதரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு பிரிவினர் மத்தியில் மிகப்பெரிய ஆளுமையாக உள்ள பாஜக தமிழ்நாட்டில் கூடுதல் கவனம் செலுத்தியதாலே வளர்ச்சி கண்டது என பேசப்பட்டுவருகிறது. அண்ணாமலை இருந்தாலும் சரி, அண்ணாமலை இல்லாவிட்டாலும் சரி பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க முடியும் என்று பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சியால் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக இருந்த அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக தற்போது தீவிரமாக போர் கொடிஉயர்த்தி உள்ளனர். இதுகுறித்து பாஜக மேல் இடத்திற்கும் தொடர்ந்து தகவல் பரிமாறப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
இதனுடைய வெளிப்பாடாகதான் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணத்தின் போது முக்கிய தலைவர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காரணம் என்று பாஜக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்தத் தலைவர்கள் தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படலாம் என்று பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் பாஜக புதிய தமிழக தலைவர் பொறுப்பிற்கு மகளிர் அணியின் தேசியத் தலைவராக உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பெயர் முதன்மையாக உள்ளதாம். பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நடைப்பயணம் முடிந்த பிறகு தலைவர் மாற்றத்திற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட தமிழ்நாடு பாஜக தலைவர் பதிவில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுகிறார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.