முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்தியது கருத்துக் கேட்பு கூட்டமா? அல்லது திமுக கட்சிக் கூட்டமா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை கட்டமாக விமர்சித்துள்ளார். 13 மீன்பிடி கிராமங்கள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் பாதிக்கப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், இதற்கு இத்தனை முக்கியத்துவத்தை திமுக அரசு கொடுத்து வருகிறது. தமிழகத்தில் இந்த சிலை கலாச்சாரம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்து இது போன்று சிலை வைக்கிறார்கள்.
அரசு நடத்தியது கருத்துக்கேட்பு கூட்டமா அல்லது திமுக கட்சி கூட்டமா என்பது தெரியவில்லை. திமுக, அவர்களின் கட்சி பணத்தை செலவு செய்து அறிவாலயம் போன்ற இடங்களில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களில் அவர்கள் வைப்பது என்பது முறையல்ல. மக்களின் கருத்துகளை அவர்கள் மதிக்க வேண்டும். Ecological Sensitive Area எனத் தெரிந்தும் அந்த இடத்தில் அவர்கள் பேனா வைப்பதற்கு முனைப்பு காட்டுவது ஏன்? பேனா நினைவுச் சின்னம் விவகாரத்தில் நாங்கள் தமிழர்கள் பக்கம் கைகோர்க்கின்றோம்.
ஜனவரி 26 ஆம் தேது இந்தியா டுடே சர்வே நடத்திய போது முதல்வரின் இமேஜ் 16% சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த முதலமைச்சருக்கும் வெறும் 6 மாதத்தில் 16 சதவீதம் இமேஜ் சரியவில்லை. அடுத்த சில மாதங்களில் மு.க.ஸ்டாலின் அவர்களின் இமேஜ் 20 சதவீதத்திற்கும் கீழ் வரப்போகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை இந்த இடைத்தேர்தல் ஏற்படுத்தும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.