மகளிர் அணி நிர்வாகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனை அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அறிக்கை.
கடந்த ஜூலை 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி நிர்வாகியான பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தமிழ்ச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பேச விடாமல் தடுத்தார். இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ செய்திகளில் வெளியாகி பரபரப்பை படுத்தியது.
இந்த நிலையில் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரான சிவபத்மநாபன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார். ஜெயபாலனுக்கு கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையின் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் அணி நிர்வாகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளரை பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருப்பது திமுகவின் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் தென்காசி மாவட்ட திமுகவில் இது தொடர்பான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.