மணிப்பூரில் பல்வேறு பகுதிகளில் இனமோதல்கள் வெடித்த்தால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இம்பால் மற்றும் விஷ்ணுபூரில் கடும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருவித பதற்றம் நிலவுவதால் மக்கள் ஒருவித அச்சத்தால் வீட்டிற்குள்ளே இருந்து வருகின்றனர். வீதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. கடைகள், வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த முறை நடந்த வன்முறை, கலவரத்துக்கு 73 பேர் பலியானார்கள். மேலும் 200-க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 30,000-த்துக்கும் மேலானவர்கள் வேறு இடங்களில் பாதுகாப்புதேடி தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த மே 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலவரம் மூண்டது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்ததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. வன்முறை, பதற்றங்கள் ஓரளவு தணிந்தாலும் இனமோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
கடந்த புதன்கிழமை விஷ்ணுபூர் மாவட்டத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் குண்டுக்காயம் அடைந்தார். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மூன்று வீடுகளை தீவைத்து கொளுத்தினர். இம்பாலிலும் இதேபோன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் இனமோதல்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்றதை அடுத்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் குல்தீப் சிங் மாநிலத்தின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இம்பால் மற்றும் விஷ்ணுபூரில் தற்போது வன்முறை ஏதும் நடைபெறவில்லை என்றாலும் நிலைமை பதற்றமாகவே இருக்கிறது. அங்கு கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மலைப்பகுதியில்தான் இரு வகுப்பினரும் உள்ளதால் அங்கு வன்முறை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கலரம் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வதந்தியின் காரணமாக மோதல்கள் நிகழ்கின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று குல்தீப் சிங் தெரிவித்தார்.
கங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் மெய்டிஸ் வகுப்பைச் சேர்ந்த ஐவரை கடத்திச் சென்றதாக தகவல்கள் வந்தன. ஆனால், உள்ளூர் கிராம மக்களே அவர்களை விரட்டியடித்துவிட்டனர். ஒரே ஒரு இளைஞர் மட்டும் கடத்தப்பட்டார். பின்னர் அவரும் பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இம்பாலில் சில பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.