செய்திகள்

கலைமாமணி கலைஞர்களுக்கு பொற்கிழி மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர்!

எம்.கோதண்டபாணி

மிழ்நாடு அரசால் 1955ம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்தச் சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973ம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2021 - 22ம் ஆண்டுக்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில், வயோதிக நிலையில், பொருளாதாரத்தில் நலிந்து, இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக வழங்கப்படும் பொற்கிழித் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்தி பத்து கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-23ம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள பத்து கலைமாமணி விருதாளர்களான கே.கல்யாணசுந்தரம், ச.சமுத்திரம், என்.பார்வதி உதயம், கே.குமரவேல், பா.முத்துசந்திரன், கோ.முத்துலட்சுமி, பி.ஆர்.துரை, ரா.கல்யாணசுந்தரம், எம்.எஸ். முகமது மஸ்தான், டி.என். வரலட்சுமி ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்ச ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், நபர் ஒருவருக்கு 10,000 ரூபாய் மதிப்பீட்டில், இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று 2021 - 22ம் ஆண்டுக்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 - 23ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 50 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஐந்து கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 15,063 கலைஞர்கள் பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 2020 - 21 மற்றும் 2021 - 22ம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் 3,000 ரூபாய் வீதம் நிதயுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் நான்கு நலிவுற்ற மூத்த கலைஞர்களுக்கு மாதந்திர நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT