டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார்.
டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் உண்டு என்பது தொடர்பான விவாதம் பல நாட்களாக இருந்து வந்ததை தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதி மன்றத்தை நாடினார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சிக்கும் டெல்லி துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் இது குறித்தான வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், டெல்லியில் துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கிறது. டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது, மேலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லை என்றால் அது அந்த அரசின் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும்.
எனவே, டெல்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த டெல்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருந்தனர்.