சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் ரூ.16.44 கோடியில், 3,047 மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இதில், ஐந்து பர்லாங் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு ஆகிய 3 சாலைகளிலும் பணிகள் முடிந்துள்ளன.
சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளச்சேரி பிரதான சாலையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த 6 சாலைகளில் 2,398 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
இதேபோல, ஆலந்தூர் மண்டலம், ஆற்காடு சாலையில் ரூ.27.40 லட்சம் மதிப்பில், 475 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் நடைபெறும் தார் சாலைப் பணியையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
“மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உரிய தரக் கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி, சாலையை அமைக்க வேண்டும். அலுவலர்கள் அவ்வப்போது பணியை ஆய்வு செய்து, சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர்
கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வரும் ஜூன் 15ஆம் தேதி திறப்பு விழா சென்னை கிண்டியில் நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.